திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டம்: சூரிய கிரகணம் தெரியாததால் மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியாததால் மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பூர்,
சூரிய கிரகணம் நேற்று காலை 8.08 மணியில் இருந்து 11.19 மணி வரை நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அது விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியை பயன்படுத்தி சிவப்பு நிறத்தை ஓரளவு காணமுடியும்
மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி தான் நிகழும் என்பதால் நேற்று நடைபெற்ற இந்த அபூர்வ நிகழ்வை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். அதே சமயம் சூரிய கிரகண நேரத்தில் ரோடுகளில் பொது மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்ட கிளை சூரிய கிரகணம் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. அதன்படி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள டீ-பப்ளிக் பள்ளியில் இருந்து சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்க்கும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், சேலம், மதுரை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் சிலரும் சூரிய கிரகணத்தை காண வந்திருந்தனர்.
காலை 8 மணி முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணாடிகளை அணிந்து கொண்டு வானத்தையே பார்த்த படி இருந்தனர். ஆனால் கடும் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணம் முடியும் வரை சூரியனே கண்ணுக்கு தெரியவில்லை. காலை 11.40 மணி வரை இதே நிலை காணப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். காலை முதல் காத்திருந்தும் இந்த அரிய சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லையே என்று புலம்பியபடியே சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியை மையமாக கொண்டு சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அவினாசி ரோட்டரி சங்கத்தின் மூலம் அவினாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை்தொடர்ந்து அங்கு மாணவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானவர்கள் பள்ளியில் கூடினார்கள். அவர்களுக்கு சோலார் கண்ணாடி வழங்கப்பட்டது.
ஆனால் அவினாசி வட்டாரத்தில் நேற்று காலை வழக்கத்தை காட்டிலும் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக மேக மூட்டம் காரணமாக வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டபடிதான் ரோட்டில் சென்றது.
அதே போல ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சூரிய கிரகணத்தை பார்க்க பள்ளி வளாகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விசேஷ கண்ணாடி அணிந்து மாணவ-மாணவிகளுடன் வானத்தில் பார்த்தார்.
ஆனால் அந்த பகுதியிலும் காலை முதல் மேகமூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு கூடியிருந்தவர்களும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story