பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.
பெரம்பலூர்,
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 கிராம ஊராட்சிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. கடந்த 23-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலின் படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37,598 ஆண் வாக்காளர்களும், 38,983 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 76,588 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 56,486 ஆண் வாக்காளர்களும், 56,427 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,12,919 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 1,89,507 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 கிராம ஊராட்சி தலைவர், 218 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 228 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 146 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 19 கிராம ஊராட்சி தலைவர், 14 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 181 பதவியிடங்களுக்கு 607 பேர் போட்டியிட்டனர்.
இதேபோல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 232 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 32 கிராம ஊராட்சி தலைவர், 23 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 289 பதவியிடங்களுக்கு 937 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1544 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவிற்காக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 122 வாக்குச்சாவடிகளிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 171 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 293 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 449 வாக்கு பெட்டிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 663 வாக்கு பெட்டிகளும் ஏற்கனவே, அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று முன்தினமே அனுப்பப்பட்டது. பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்கு பெட்டிகளின் சீல்களை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் உடைத்து, வாக்கு பெட்டியை திறந்து காண்பித்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டியை சீல் வைத்து, ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைத்தனர். பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு தொடங்கியவுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தனர். இதனால் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். இதனால் காலையிலேயே வாக்குச்சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் பிரிதொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது. அதனை வாங்கிய வாக்காளர்கள் அந்த வாக்குச்சீட்டுகளில் தங்களுக்கு பிடித்தமான சின்னங்களில் முத்திரையை குத்தி, வாக்கு பெட்டியில் மடித்து போட்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர். முன்னதாக வாக்களித்தற்காக அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது. வாக்காளர்கள் பலர் காலை 11 மணிக்கு முன்பாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தனர். காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டு முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி, அதற்கான வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story