போக்சோ வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு கோர்ட்டுகள் தொடக்கம்; நீதிபதிகள், சமூகத்தின் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும்
நீதிபதிகள் சமூகத்தின் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும் என்று போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளை தொடங்கிவைத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி கூறினார்.
வேலூர்,
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தில் பதிவுசெய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய கோர்ட்டு கட்டிடத்தில் மாவட்ட சிறப்பு கோர்ட்டும், புதிய கட்டிடத்தில் கூடுதல் மகளிர் நீதித்துறை நடுவர் கோர்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் தொடக்கவிழா நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி கலந்துகொண்டு 2 சிறப்பு கோர்ட்டுகளையும் திறந்துவைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலமைப்பு சட்டத்தில் நீதிபதிகள் பங்கு அதிகம் என்பதால் மற்ற தொழில்களைவிட நீதிபதி என்ற வார்த்தை அதிகம் இடம்பெறுகிறது. இது நீதிபதிகளின் பொறுப்பு சமூகத்தில் அதிகமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. எனவே நீதிபதிகள் விரைவான தீர்ப்பினை வழங்கி, சமூகத்தின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி, மகளிர்நீதிமன்ற நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலசுப்பிரமணியன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ராம்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் உலகநாதன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் தினகரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலச்சந்தர் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story