காலஅவகாசம் இல்லாததால் தமிழகம் முழுவதும் இணைப்பு வாக்காளர் பட்டியல் திடீரென வெளியிடப்பட்டது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
காலஅவகாசம் இல்லாததால் தமிழகம் முழுவதும் இணைப்பு வாக்காளர் பட்டியல் திடீரென வெளியிடப்பட்டது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் வடிவேல்நகர் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வாக்கினை செலுத்தினார்.
அப்போது அவரது விரலில் பட்ஸ் (காது குடையும் குச்சி) மூலம் மை வைத்ததால் அது பரவியபடி இருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட மை வைக்கும் அலுவலரிடம் சென்று, இனி பட்ஸை பயன்படுத்தி மை வைக்காதீர்கள்... இதனால் விரலில் வைத்த மையானது சிதறி வாக்கு சீட்டில் விழுந்தால் வாக்கு எண்ணும் போது மையத்தில் சிரமம் ஏற்படும். எனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய பிரத்யேக குச்சியை வைத்து மை வைக்கும் பணியினை தொடருங்கள் என அமைச்சர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனை, அமைச்சர் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கினார். மேலும் அனைத்து இடங்களிலும் வாக்காளரின் விரலில் மை வைப்பதை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கரூர் மாவட்டதை பொறுத்தவரையில் தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனது வாக்கினை நான் செலுத்திவிட்டேன்.
அனைத்து மக்களும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்தால் ஏதாவது காரணம் செல்ல வேண்டும்... என்பதற்காக இணைப்பு வாக்காளர் பட்டியல் தரவில்லை உள்ளிட்ட குற்றசாட்டுகளை எதிர்கட்சியினர் முன்வைக்கின்றனர். காலஅவகாசம் இல்லாததால் இணைப்பு பட்டியல் தமிழகம் முழுவதும் அவசரமாக தான் தயார் செய்யப்பட்டு திடீரென வெளியிடப்பட்டது. கரூரில் நாங்களே (அ.தி.மு.க.) முழு பட்டியலை பெறவில்லை. புகைப்படமே இல்லையே என கேட்டதற்கு... அதற்கு நேரமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதுமே இந்த நிலை தான் இருக்கிறது. தேர்தலில் எவ்வித முறைகேடும் இருக்காது. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு உள்ளாட்சியில் முதல் முறையாக இப்போது கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதைவிடுத்து கேமரா பொருத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்றார்.
கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி தனது சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நீதி மன்றத்தை நாடி முறையான இட ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என முறையிட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை வேறு வழியின்றி நடத்த கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுவது தான் வாடிக்கை. அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு யார் யார் வாக்களிக்கிறார்கள் என்ற நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் கேமராக்கள் பொறுத்தவில்லை. யார் யார் வாக்கு பதிவுக்கு வருகிறார்கள் என்ற பதிவு இல்லாமல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், பரமத்தி,அரவக்குறிச்சி,தாந்தோணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூடுதல் இணைப்பு வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடிக்கு செல்லக் கூடிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு முறையாக வழங்கப்பட வில்லை. ஆளும் கட்சியினருக்கு அந்த பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்றார்.
க.பரமத்தி ஒன்றியம் கூடலூர் மேற்கு ஊராட்சி பெரிய திருமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரூர் எம்.பி. ஜோதி மணியும், கரூர் அருகே உள்ள நெரூர் அரசு பள்ளியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வும் வாக்களித்தனர்.
Related Tags :
Next Story