ஊரக உள்ளாட்சி தேர்தல்: குன்னூர், கோத்தகிரி ஒன்றியங்களில் விறு விறுப்பான வாக்குப்பதிவு
குன்னூர், கோத்தகிரி ஒன்றியங்களில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது. இதற்காக குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 54 வாக்குச்சாவடிகள், கோத்தகிரி ஒன்றியத்தில் 100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறம், கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை மற்றும் நீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
குன்னூர், கோத்தகிரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வார்டுகள் அடிப்படையில் ஒரு சில பள்ளிகளில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் குறிக்கப்பட்டு, அங்கு அரசியல் கட்சியினர் துண்டு பிரசுரங்கள் வழங்காமல் இருக்கவும், கூட்டம் கூடாமல் இருக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 200 மீட்டர் தூரத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நின்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னர், வாக்காளர்கள் கையொப்பத்துடன் கூடிய 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. இதையடுத்து மேஜையில் மறைவு அட்டையுடன் கூடிய வாக்குப்பதிவு செய்யும் இடத்தில், வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குச்சீட்டுகள் மடிக்கப்பட்டு சிறிய மற்றும் பெரிய அளவிலான வாக்குப்பெட்டிகளில் போடப்பட்டன.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குச்சீட்டுகள் கொடுப்பது, மை வைப்பது, வாக்குச்சாவடியை கண்காணிப்பது போன்ற பணிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டார்கள். தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். முதியவர்கள் ஊன்றுகோல் உதவியுடன் வந்து வாக்களித்தார்கள். மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் சென்று வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டது. வயது முதிர்ந்த நிலையில் வந்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவி செய்தனர். முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
குன்னூர் ஒன்றியம் உபதலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அருவங்காடு, எடப்பள்ளி, இளித்தொரை, கோத்தகிரி ஒன்றியம் கட்டபெட்டு, நெடுகுளா, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியங்களில் வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். முதல் கட்ட தேர்தலில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story