திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு - கலெக்டர் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2019 11:00 PM GMT (Updated: 27 Dec 2019 5:46 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு இருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குப்பதிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அவருடன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊராட்சிகள் தணிக்கை உதவி இயக்குனர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேதநாயகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமாமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஏகாம்பரம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த பாண்டூர் பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் தன்னுடைய மனைவி இந்திரா ராஜேந்திரனுடன் சென்று தன் வாக்கை பதிவு செய்தார். அதே போல பாண்டூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது வயது முதிர்ந்த ஒருவரை வாக்களிக்க அவரது உறவினர்கள் தூக்கி வந்து வாக்களித்தனர்.

இதேபோல் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏதுவாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story