தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தல் இளம் வாக்காளர்கள் உற்சாகம் ‘‘வாக்குச்சீட்டில் ஓட்டுப்போட்டது வித்தியாசமாக இருந்தது''
தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்ட இளம் வாக்காளர்கள், ‘‘வாக்குச்சீட்டில் ஓட்டு போடுவது வித்தியாசமாக இருந்தது‘‘ என்று உற்சாகமாக கூறினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட்ட இளம் வாக்காளர்கள், ‘‘வாக்குச்சீட்டில் ஓட்டு போடுவது வித்தியாசமாக இருந்தது‘‘ என்று உற்சாகமாக கூறினர்.
வாக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 1126 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இளம் வாக்காளர்களும் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர். பெரும்பாலானவர்கள் பூத் சிலிப் பயன்படுத்தி வாக்களித்தனர். வாக்குச்சாவடி அருகே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருந்து பூத் சிலிப் பெறாதவர்களுக்கு, பூத் சிலிப்பை வழங்கினர்.
இளம் வாக்காளர்கள்
இதுகுறித்து இளம் வாக்காளரான புதுக்கோட்டையை சேர்ந்த முத்துலட்சுமி கூறும்போது, ‘‘நான் முதல் முறையாக ஓட்டு போடுகிறேன். அதுவும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க கூடியது. மக்கள் எந்தஒரு விஷயத்துக்கும் பஞ்சாயத்தை தேடி செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிர்வாகத்துக்கு உள்ளூரை சேர்ந்தவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களித்து இருக்கிறேன்‘‘ என்று கூறினார்.
பணம் பெறாமல்...
புதுக்கோட்டையை சேர்ந்த திவ்யா கூறும்போது, ‘‘சேவை மனப்பான்மையோடு, மக்கள் பணியாற்றுபவர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் வாக்களித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்து உள்ளேன். அதுவும் 4 விதமான பதவிகளுக்கு வெவ்வேறு நிற வாக்குச்சீட்டில் ஓட்டு போடுவது வித்தியாசமாக இருந்தது‘‘ என்று கூறினார்.
இளம் வாக்காளரான அருணாபாரதி கூறும்போது, ‘‘உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது. இதில் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டு போட்டு உள்ளோம். வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் அவரவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஓட்டு போடலாம். மக்கள் பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் ஓட்டு உரிமையை யாரும் விட்டுக் கொடுக்க கூடாது‘‘ என்றார்.
Related Tags :
Next Story