மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தலில் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 8 ஒன்றியங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,244 பதவி இடங்களுக்கு மொத்தம் 3,875 பேர் போட்டியிட்டனர். இவர்களை தேர்வு செய்ய 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்க வசதியாக 893 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகளும் நேற்று முன்தினமே வாக்குச்சாவடிகளுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை கவனித்தனர். நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தனது சொந்த கிராமமான கோவிந்தம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வந்து ஓட்டு போட்டார். மனைவி சாந்தி, மகன் தரணி ஆகியோரும் வாக்களித்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் அத்தனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கொல்லிமலை ஒன்றியம் அரியூர்நாடு ஊராட்சி தெம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி கொத்தமங்கலம் ஊராட்சி நஞ்சப்பகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2-வது வார்டு கருவேப்பம்பட்டியில் போட்டியிடும் திருநங்கை ரியா சீனிவாசம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டார்.

தேர்தல் நடைபெற்ற 8 ஒன்றியங்களிலும் பெரும்பாலான முதியவர்கள் கம்பு ஊன்றி வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். சில இடங்களில் முதியவர்களை தூக்கி வந்து ஓட்டுபோட வைப்பதையும் காண முடிந்தது. மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க அழைத்து செல்ல வசதியாக பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வீல்சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலை பொறுத்த வரையில் நேற்று காலை 9 மணிக்கு 13 சதவீதமும், 11 மணிக்கு 31 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 50 சதவீதமும், பிற்பகல் 3 மணிக்கு 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. கன்னி வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து, முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஒருசில இடங்களில் வாக்கு சேகரிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே சிறு, சிறு தகராறு ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story