திருச்சி அருகே பரபரப்பு: தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினர்
திருச்சி அருகே தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினர், அத்துமீறிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் கட்டமாக 6 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பகல் 12.30 மணிக்கு வேங்கூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடக்கும் வாக்குப்பதிவை ஆய்வு செய்வதற்காக திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேஷ் மற்றும் பயிற்சி கலெக்டர் சரண்யா, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் நடத்தும் அதிகாரியான சகுந்தலா உள்ளிட்டோர் 3 கார்களில் வந்தனர்.
தேர்தல் பார்வையாளர் கணேஷ் வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அங்கு பேட்ஜ் அணிந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை பார்த்து, ஏன் தேவையில்லாமல் இங்கே நிற்கிறீர்கள்? என கேட்டு அவரை வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதையும், ஏஜெண்டுகளுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? என்றும், வரிசையில் நின்ற பெண் வாக்காளர்களிடம் பூத் சிலிப்பை வாங்கியும் ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் பணியில் உபரியாக இருக்கும் ஊழியர்களை, அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பி இருக்கிறோம். பூத் சிலிப் முழுமையாக கொடுக்கப்பட்டு விட்டது. சில இடங்களில் புகார் வந்தது. அவற்றை களைவதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட்டது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் சின்னங்கள் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது. அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர் ஆகிய 3 ஒன்றியங்களில் இதுவரை(மதியம் 12.30 மணிவரை) ஆய்வு செய்திருக்கிறோம்.
40 வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டு இருக்கிறேன். மக்கள் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, நிழற் கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் செய்யப்பட்டு இருந்தது. பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ உள்ளாட்சி தேர்தலில் ஏற்படுத்தப்பட வில்லை. அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் பகல் 12.50 மணிக்கு தேர்தல் பார்வையாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்ற 100 மீட்டர் தூரத்திற்குள் திடீரென்று அவரது வாகனத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய அவர், அங்கிருந்தவர்களிடம் ஏன் காரை வழிமறிக்கிறீர்கள்?. என்ன பிரச்சினை? என கேட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த அனைத்து அரசியல் கட்சியினரும், ‘‘வேங்கூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் வீடு வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ளது. தேர்தல் பணிக்கு வந்த திருவெறும்பூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன், அத்துமீறி அவரது வீட்டிற்குள் நுழைந்து வேட்பாளரின் மனைவியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன் செல்போனில் படமும் எடுத்திருக்கிறார். இத்தனைக்கும் வேட்பாளர் வீட்டில் இல்லை. வாக்குச்சாவடி அருகே வீடு இருப்பது குற்றமா?. அவரது வீட்டிற்கு உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவரையும் வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். எனவே, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் உங்கள் காரை வழிமறிக்க வில்லை. பிரச்சினையை தீர்ப்பதற்காக முறையிடுகிறோம். இந்த தேர்தலில் நாங்கள் கட்சி பாகுபாடு பார்க்கவில்லை. அனைவரும் பிரச்சினையின்றி வாக்களித்திருக்கிறோம்’’ என்றனர். அதற்கு தேர்தல் பார்வையாளர் கணேஷ்,‘உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்படும்’’ என்றார். பின்னர் அனைவரும் காருக்கு வழிவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story