இருவேறு இடங்களில் விபத்து - பள்ளி மாணவர் உள்பட 2 பேர் சாவு


இருவேறு இடங்களில் விபத்து - பள்ளி மாணவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு இடங்களில் நடத்த விபத்துகளில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தயாளன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 12). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை லோகேஷ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணராஜ் (13), பரத் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்றார். பின்னர் மீண்டும் திருவள்ளூரில் இருந்து பெரியகுப்பம் நோக்கி சென்றனர்.

மணவாளநகர் மேம்பாலம் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன்வந்த கிருஷ்ணராஜ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் போராடினார். பரத் காயமின்றி தப்பினார். இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த கிருஷ்ணராஜை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (55). இவரும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (50) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் குன்னவாக்கத்தில் இருந்து பண்ருட்டி சந்தை பகுதிக்கு சென்றனர். வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது அதே திசையில் பின்னால் வந்த கார் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் படுகாயம் அடைந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோகன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story