அரியலூர் மாவட்ட 3 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு - 71.13 சதவீதம் பதிவாகியது


அரியலூர் மாவட்ட 3 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு - 71.13 சதவீதம் பதிவாகியது
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட 3 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 71.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு 233 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 4 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு ஒருவரும் என மொத்தம் 238 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 112 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 197 கிராம ஊராட்சி தலைவர், 1,429 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 1,750 பதவியிடங்களுக்கு 5,483 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முதல் கட்டமாக அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 522 வாக்குச்சாவடிகளில் 1,33,625 ஆண் வாக்காளர்களும், 1,33,461 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,67,089 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 90,222 ஆண் வாக்காளர்களும், 99,766 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,89,988 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் 69 வாக்குச்சாவடிகள் மிக, மிக பதற்றமானது என்றும், 73 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என்றும், 59 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் போலீசாரால் கண்டறியப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அந்தந்த வாக்குச்சாவடிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணி நிலவரப்படி 6.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. ஆண், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். காலை 11 மணி நிலவரப்படி 18.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. அதன்பிறகு 1 மணியளவில் 34.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

பிற்பகலில் சற்று மந்தமான நிலையில் காணப்பட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பல வாக்குச்சாவடிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாக்கு செலுத்த வந்திருந்தனர். சில இளைஞர்கள் வயதான மூதாட்டிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வந்து வாக்குகளை பதிவு செய்ய வைத்தனர். வாக்குச்சாவடிகள் முன்பு கூட்டமாக நின்ற பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளை அவ்வப்போது போலீசார் அப்புறப்படுத்தி வந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 55.8 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. இதனை தொடர்ந்து மாலை 5 மணி நிலவரப்படி 71.13 சதவீதம் வாக்குள் பதிவாகியது.

வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் ரத்னா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த பின்பு அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகளை மூடி சீல் வைக்கப்பட்டு அரசினர் கலை கல்லூரியிலும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வருகிற 2-ந் தேதி காலை 8 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தொடர்ந்து வருகிற 30-ந் தேதி ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு 2-வது கட்டமாக தேர்தல் நடக்கிறது.

Next Story