திருவையாறு அருகே, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண், கணவருடன் தர்ணா
திருவையாறு அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் தனது கணவருடன் வாக்குச்சாவடி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் 167 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவையாறு அருகே உள்ள முகாசாகல்யாணபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சதாம்உசேன் மனைவி ராபியத்பர்தனா(வயது25), ஷேக்அலாவுதீன் மனைவி பவுஜியானா(30) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முகாசாகல்யாணபுரம் ஊராட்சிக்கு முகமதுபந்தர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற பள்ளியில் ராபியத்பர்தனா அவரது கணவர் சதாம்உசேன் மற்றும் எதிர் தரப்பில் போட்டியிடும் பவுஜியானா அவரது கணவர் ஷேக்அலாவுதீன் ஆகியோர் இருந்தனர். அப்போது ராபியத்பர்தனா வாக்குச்சாவடிக்குள் வாக்கு கேட்டதாக கூறி பவுஜியானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் கூறினர்.
இதை கண்டித்து ராபியத்பர்தனா தனது கணவர் சதாம்உசேனுடன் வாக்குச்சாவடி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராபியத்பர்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
திருவையாறு அருகே உள்ள கல்யாணபுரம் 1-ம் சேத்தி ஊராட்சி பொன்னாவரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாலை 5 மணிக்குள் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதே ஊராட்சியில் உள்ள அலமேலு மங்கா தொடக்கப்பள்ளி, முகாசாகல்யாணபுரம் ஊராட்சி முகமதுபந்தர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செம்மங்குடி ஊராட்சி ஒக்கக்குடி கிராம வாக்குச்சாவடி ஆகிய இடங் களிலும் மாலை 5 மணிக்கு பிறகு வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்காளர்கள் மாலை சுமார் 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சி தலைவர்கள், 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. பூதலூர் ஒன்றியத்தில் வாக்குப்பதிவுக்கு 168 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின்னர் நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பாக நடைபெற்றது.
முத்துவீரக்கண்டியன்பட்டி வாக்குச்சாவடியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு உரிய மஞ்சள் நிற வாக்கு சீட்டு குறைவாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வாக்குசீட்டுகள் கொண்டு வரப்பட்டு தேர்தல் தொடர்ந்து நடைபெற்றது.
Related Tags :
Next Story