முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல், தஞ்சை மாவட்டத்தில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு
தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறு, விறுப்பாக தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்காக 3 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்யப்படாத இடங்களில் 4 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 226 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 145 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. 62 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
முதியவர்கள், ஊனமுற்றவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் முதியவர்களையும், ஊனமுற்றவர்களையும் கை தாங்களாக உறவினர்கள் அழைத்து சென்றனர். வயதானாலும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். சிலர் ஊன்றுகோல்கள் உதவியுடன் நடந்து வந்து வாக்களித் தனர்.
பெண்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது பலர் தங்களது மகன், மகள்களையும் கூடவே அழைத்து வந்து வரிசையில் நின்றனர். வாக்குச்சாவடியில் வாக்களிக்க பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றபோது குழந்தைகளை கணவன்மார்கள் வாங்கி கொண்டு காத்திருந்தனர். மனைவி வாக்களித்துவிட்டு வந்த பிறகு அவர்களிடம் கைக்குழந்தைகளை கொடுத்துவிட்டு கணவன்மார்கள் வாக்களிக்க சென்றனர். இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது முதல் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சர்வ சாதாரணமாக நின்று கொண்டு தங்களது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் வலியுறுத்தினர். பசுபதிகோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியின் முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நின்று கொண்டு பிரசாரம் செய்தனர்.
இதை பார்த்த போலீசார், அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். அதற்கு வாக்குச்சாவடிக்குள் நின்று கொண்டு பிரசாரம் செய்பவர்களை முதலில் வெளியே அனுப்புங்கள் நாங்கள் கலைந்து செல்கிறோம் என்றனர். இதையடுத்து அனைவரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சரபோஜிராஜபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குக்குச்சாவடியில் வேட்பாளர் ஒருவர், தனது ஆதரவாளருடன் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், இருவரையும் வெளியே போகும்படி கூறினார். இதனால் கோபம் அடைந்த ஒருவர், வேட்பாளராகிய என்னை எப்படி வெளியே போக சொல்லலாம் என போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தார். மற்றொருவர் அமைச்சரிடம் சொல்ல வேண்டியது வரும் என மிரட்டினார். இதையடுத்து சக கட்சிகாரர் ஒருவர் வந்து, அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
Related Tags :
Next Story