காட்கோபரில் குடோன்களில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு


காட்கோபரில் குடோன்களில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:15 AM IST (Updated: 28 Dec 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபரில் உள்ள குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர்.

மும்பை, 

காட்கோபரில் உள்ள குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர்.

குடோன்களில் தீ விபத்து

மும்பை காட்கோபர் கைரானி ரோடு பகுதியில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளது. நேற்று மதியம் அங்குள்ள மரச்சாமான்கள் வைத்திருந்த ஒரு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து குடோன்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீ மளமளவென மற்ற குடோன்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு

இதற்கிடையே 15 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குடோன் அருகே வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கரும்புகையில் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோன்களில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் 4 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story