திருப்பூர் பகுதிகளில் விறு, விறுப்பாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்: ஆர்வமாக வாக்களித்த வாக்காளர்கள்


திருப்பூர் பகுதிகளில் விறு, விறுப்பாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்: ஆர்வமாக வாக்களித்த வாக்காளர்கள்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:22 AM IST (Updated: 28 Dec 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் விறு, விறுப்பாக நடந்தது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

திருப்பூர்,

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் எனவும், முதற்கட்டம் நேற்றும், 2-வது கட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது.

இந்த முதற்கட்ட தேர்தலில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 88 வேட்பாளர்கள் 999 பதவிகளுக்கு போட்டியிட்டனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று உற்சாகமாக வாக்களிக்க தொடங்கினர். வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று வாக்குப்பதிவு நடந்த போது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பாக அழைத்து சென்று, வாக்களிக்க வைத்தார்.

இதுபோல் மேலும், அந்த வாக்குச்சாவடிக்கு பெருமாநல்லூர் தெற்குவீதியை சேர்ந்த காளியண்ணன் (வயது 65) என்ற மாற்றுத்திறனாளி சக்கர வாகனத்துடன் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே அங்குள்ள சாய்வுதள பாதையில் அழைத்து செல்லப்பட்டு வாக்களித்தார்.

இதுபோல் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமானவர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். பெரிய ஊராட்சியான கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே வரிசையில் காத்து நின்று பொதுக்கள் வாக்களித்தனர்.

இதற்கிடையே கணக்கம்பாளையம் ஊராட்சி கூடுதல் பள்ளி கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சின்னதோட்டத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டியான சவுண்டம்மாள் வந்து வாக்களித்தார்.

மூதாட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்து நிற்க முடியாது என்பதால், அவர்கள் உடனே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பட்டம்பாளையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களது உறவினர்கள் கைகளில் தூக்கியபடி வாக்களிக்க அழைத்து வந்தனர். ஆதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் உள்பட பல இடங்களில் முதல் முறையாக சில இளம்பெண்கள் வாக்களித்து சென்றனர்.

இதுபோல் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம் தொடக்கப்பள்ளி, சின்னகேவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வள்ளிபுரம், மொய்யாண்டம்பாளையம், தொரவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பலர் காலையில் இருந்து மாலை 5 மணி வரை நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வருகிறவர்கள் எந்த ஒரு இடையூறும் இன்றி வாக்களிக்கும் வகையில், வாகனங்கள் நிறுத்த அனுமதிக்காமல் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் எந்த ஒரு இடையூறும் இன்றி வாக்களித்து சென்றனர். சில வாக்குச்சாவடிகளில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்து சீர் செய்தனர். வாக்களித்தவர்களை அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

காளிபாளையம், காளிபாளையம் புதூர் உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க சென்றவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பூத் சிலிப்புகள் வழங்கினர். இதனை வழங்கும் போது தங்களது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறினர். மேலும், சிலர் அந்த பகுதியில் வந்த வாகனங்களில் வந்தவர்களையும் வழிமறித்து தங்களுக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தினர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு திருப்பூர் பகுதிகளில் எந்த பாதிப்பும் இன்றி விறு, விறுப்பாக நடைபெற்றது.

பொதுமக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். அம்மாபாளையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் பெண்கள் குழந்தையுடன் வாக்களித்தனர். ஒரு சிலர் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு வாக்கு செலுத்தினர்.

இதுபோல் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை கோவை மண்டல ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, பாரதிபுரம் பள்ளி, பூமலூர் பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஏராளமான முதியவர்கள் தங்களது உறவினர்களுடன் வந்து வாக்களித்து சென்றனர்.


Next Story