கருவேப்பிலைபாளையத்தை மீண்டும் திருநாவலூர் ஒன்றியத்தில் சேர்க்க கோரி - பாடைகட்டி, ஒப்பாரி வைத்து கிராம மக்கள் போராட்டம்
கருவேப்பிலைபாளையத்தை திருநாவலூர் ஒன்றியத்தில் சேர்க்க கோரி கிராம மக்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் ஒன்றியம் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள சிறுத்தனூர் மதுரா கருவேப்பிலைபாளையம் கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துடன் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருநாவலூர் அருகே கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானமூர்த்தி தலைமையில் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் எங்கள் ஊரில் இருந்து திருநாவலூர் ஒன்றியம் தான் அருகில் உள்ளது. இதன்காரணமாக எங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள நாங்கள் அங்கு சென்றுவரத்தான் எளிதாக இருக்கும். எனவே எங்கள் கிராமத்தை மீண்டும் திருநாவலூர் ஒன்றியத்தில் சேர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரி பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story