தஞ்சை ரெயில் நிலையத்தில் 40 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மும்முரம்


தஞ்சை ரெயில் நிலையத்தில் 40 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 5:07 PM GMT)

தஞ்சை ரெயில் நிலையத்தில் 40 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி-நாகை வழித்தடம், அவர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் குறுகிய ரெயில் பாதையாக மாற்றப்பட்டு, மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது.

இந்த வழித்தடத்தை மெயின் லைனாக கருதப்பட்டது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் அதிகரிப்பு

தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் 23-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது. இதையடுத்து ஒவ்வொரு நடைபாதையிலும் உதவி மையம் அமைக்கப்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடு

இருந்தாலும் ரெயிலில் வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்காகவும், ரெயில்களில் உறவினர்களை ஏற்றி விடுவதற்காகவும் வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதை தடுக்கவும், ரெயில்கள், ரெயில் நிலையங்களில் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டறியவும் கண்காணிப்பு கேமரா ரெயில் நிலையத்தில் பொருத்தப்படாமல் இருந்தது. மேலும் பொருட்களை பரிசோதனை செய்யும் கருவிகளும் இல்லை.

எனவே திருச்சியை போல் தஞ்சை ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா, ஸ்கேன் கருவி, நிரந்தரமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை போன்றவற்றை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என ரெயில்வே பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் படி தஞ்சை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

40 கண்காணிப்பு கேமரா

ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில், பின்புறம் உள்பட 3 இடங்களில் சுழலும் கேமரா வைக்கப்பட்டுள்ளது. நடைமேடைகள், டிக்கெட் கொடுக்கும் இடம், சுரங்கபாதை உள்ளிட்ட பகுதிகளில் 37 கேமரா வைக்கப்படுகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முன்பு டிக்கெட் கொடுக்கும் இடமாக செயல்பட்ட பகுதியில் கண்காணிப்பு அறை அமைக்கப்படுகிறது. பணிகள் முழுவதும் முடிந்தவுடன் கண்காணிப்பு பணி ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் ரெயில்வேதுறைக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story