கர்நாடகத்தில் போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்தினால் அபராதத்துடன் தண்டனை துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி அறிவிப்பு


கர்நாடகத்தில் போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்தினால் அபராதத்துடன் தண்டனை துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதத்துடன் தண்டனை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதத்துடன் தண்டனை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் வன்முறை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகத்தில் மங்களூருவில் நடந்த வன்முறையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். பொது சொத்துகளுக்கும், தனியார் சொத்துகளுக்கும் மர்மநபர்கள் சேதம் விளைவித்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதுபோல, கர்நாடகத்திலும் வன்முறை, கலவரத்தின்போது பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்துபவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து துமகூருவில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அபராதம் வசூலிப்பது...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் நடந்த வன்முறையில் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு மர்மநபர்கள் தீவைத்து நாசப்படுத்தினார்கள். இதுபோன்று உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆனால் போராட்டத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யும் சட்டம் கர்நாடகத்தில் இல்லை. வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

அபராதத்துடன் தண்டனை

இவ்வாறு பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதம், தண்டனை வழங்க கர்நாடக சட்டத்தில் இடம் உள்ளது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். அதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

பொது சொத்துகளை சேதப்படுத்துவோரிடம் அபராதம் வசூலிப்பதுடன் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜாமீனில் வந்து விடுகிறார்கள்

இதுகுறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். எனவே பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதற்காக கர்நாடகத்தில் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பொது சொத்துகளை சேதப்படுத்துபவருக்கு அபராதம் விதிப்பது, அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழிவகை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் கலந்து ஆலோசிக்கப் படும், என்றார்.

Next Story