முதல்கட்ட தேர்தல் நடந்த 5 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு


முதல்கட்ட தேர்தல் நடந்த 5 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 28 Dec 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

முதல்கட்ட தேர்தல் நடந்த 5 ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு, தக்கலை, திருவட்டார், மேல்புறம் ஆகிய 5 ஒன்றியங்களில் இந்த தேர்தல் நடந்தது. இதில் மேல்புறம் ஒன்றியத்தில் மட்டும் மின்னணு எந்திரங்கள் மூலமும், மற்ற ஒன்றியங்களில் வாக்குச்சீட்டுகள் மூலமும் வாக்குப்பதிவு நடந்தது.

இதற்காக 634 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு நேரம் முடிந்தபிறகும் 5 வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததால் அங்கு டோக்கன் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல்கட்ட தேர்தலில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 88 ஆயிரத்து 467 வாக்காளர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 195 வாக்காளர்கள் அதாவது 65.93 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் திருவட்டார் ஒன்றியத்தில் ஒரு திருநங்கையும் வாக்களித்துள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் நள்ளிரவு வரை ஓட்டுப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டன. ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப் பொட்டிகள் பழவிளை காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குருந்தங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப் பெட்டிகள் வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா பெண்கள் என்ஜினீயரிங் கல்லூரியிலும், தக்கலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப்பெட்டிகள் புங்கரை நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப்பெட்டிகள் ஏற்றக்ே்காடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.

இந்த அறையின் வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ேமலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்கள் அனைத்துக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள், உதவி சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வருகிற 2-ந் தேதி ஓட்டுப்பெட்டிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல் வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்குகளுக்கு கொண்டு சென்று எண்ணப்படும்.

Next Story