கோத்தகிரி அருகே, ரே‌‌ஷன் கடைக்குள் புகுந்து கரடி அட்டகாசம் - பொருட்களை சேதப்படுத்திச் சென்றது


கோத்தகிரி அருகே, ரே‌‌ஷன் கடைக்குள் புகுந்து கரடி அட்டகாசம் - பொருட்களை சேதப்படுத்திச் சென்றது
x
தினத்தந்தி 28 Dec 2019 10:30 PM GMT (Updated: 28 Dec 2019 5:38 PM GMT)

கோத்தகிரி அருகே ரே‌‌ஷன் கடைக்குள் புகுந்த கரடி ஒன்று பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது.

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பாண்டியன் பூங்கா அருகே ஆவின் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் ரே‌‌ஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரே‌‌ஷன் கடையில் கிரு‌‌ஷ்ணாபுதூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது ரே‌‌ஷன் கார்டு மூலமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்த ரே‌‌ஷன் கடையில் பணிபுரியும் ஊழியர் சம்பவத்தன்று தனது விற்பனையை முடித்து விட்டு மாலை கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததும், அங்கு வைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் இது குறித்து கோத்தகிரி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கரடி ஒன்று ரே‌‌ஷன் கடைக்கு அருகே உள்ள மரத்தில் அமர்ந்து கடையின் ஜன்னலை உடைத்து அந்த வழியாக உள்ளே புகுந்து உள்ளது.

மேலும் ரே‌‌ஷன் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது.

அதன்பின்னர் மற்ற பொருட்களையும் சிதறடித்து நாசம் செய்துவிட்டு அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:-

ரே‌‌ஷன் கடையில் புகுந்த கரடி அங்கிருந்த பொருட் களை நாசம் செய்து உள்ளது. ஆனால் பொங்கல் பரிசு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கரடி ஒன்று ரே‌‌ஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர்கள், வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story