ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பனிமூட்டத்தால் இயற்கை அழகை பார்க்க முடியாமல் ஏமாற்றம்


ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பனிமூட்டத்தால் இயற்கை அழகை பார்க்க முடியாமல் ஏமாற்றம்
x
தினத்தந்தி 29 Dec 2019 3:30 AM IST (Updated: 28 Dec 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பனிமூட்டத்தின் காரணமாக இயற்கை அழகை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊட்டி, 

மலைப்பிரதேசமான ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவும். வெளிநாடுகளில் நிலவும் சீதோ‌‌ஷ்ண காலநிலை ஊட்டியிலும் நிலவுவதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர்.

ஊட்டி நகரில் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் கம்பளி துணிகளை அணிந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைசிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. ஒரு நபருக்கு ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கு நுழைவுவாயிலில் டிக்கெட் எடுக்க கூட்டம் அலைமோதியதோடு, சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைசிகரத்தில் நின்றவாறு ஊட்டி நகரின் அழகை கண்டு ரசித்தனர். அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் 4 நவீன தொலைநோக்கிகள் மூலம் குன்னூர் நகரம், வெலிங்டன், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முக்கூர்த்தி அணை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

ஆனால், நேற்று மேகமூட்டம் இருந்ததாலும், தொலைவில் பனிமூட்டம் நிலவியதாலும்தொலைநோக்கி மூலம் அதிக இடங்களை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியவில்லை. ஊட்டி நகரை மட்டும் பார்க்க முடிந்தது. இதனால் தொலைநோக்கிகள் பெட்டிகளுக்குள் வைத்து பூட்டு போடப்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் தொலைநோக்கிகள் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மலைசிகரம் மற்றும் பாறைகளில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நீலகிரியில் விளைந்த பழங்கள், மலைக்காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்ததால், மலைப்பாதையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் கோத்தகிரி சாலை சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு மேலே சுற்றுலா வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

சாலையில் தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரத்துக்கு பிறகு வாகனங்கள் கீழே வந்த பின்னர் மீண்டும் மேலே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றனர்.

Next Story