சேலம் மாவட்டத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 12 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


சேலம் மாவட்டத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 12 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 12 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பெட்டிகளை அதிகாரிகள் சீல் வைத்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவில் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் தனி அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைத்து, அந்த அறைக்கு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் பாதுகாப்பு பணியை போலீசார் வசம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்தியவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடியும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 இடங்கள்

சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 12 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. அதாவது, எடப்பாடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் காடையாம்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியிலும், கொளத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொங்கணாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மேச்சேரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மேச்சேரி கைலா‌‌ஷ் காவேரி பொறியியல் கல்லூரியிலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் நங்கவள்ளி கைலா‌‌ஷ் கலை, அறிவியல் கல்லூரியிலும்வாக்குகள் எண்ணப்படுகிறது.

ஓமலூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கருப்பூர் அருகே பத்மவாணி கலை அறிவியல் கல்லூரியிலும், சங்ககிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தாரமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியிலும், வீரபாண்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏற்காடு ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகின்றன. இந்த 12 மையங்களிலும் நுழைவு வாயில், கட்டிடம், வாக்குப்பெட்டிகள் உள்ள அறைகள் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story