குட்டி நூலகமாக காட்சியளிக்கும் சலூன் புத்தகம் வாசிப்பவர்களுக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் சலுகை


குட்டி நூலகமாக காட்சியளிக்கும் சலூன் புத்தகம் வாசிப்பவர்களுக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் சலுகை
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 29 Dec 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

அழகை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கும் வகையில் இங்கு ஒரு ‘குட்டி நூலகம்’ செயல்படுகிறது.

தூத்துக்குடி, 

சலூன்... தலை முடியை திருத்தி அழகை மெருகூட்டும் இடம். ஆனால், இந்த சலூன் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அழகை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கும் வகையில் இங்கு ஒரு ‘குட்டி நூலகம்’ செயல்படுகிறது.

புதுமை சலூன்

இத்தகைய புதுமை சலூன் வேறு எங்கும் அல்ல, தூத்துக்குடி மில்லர்புரத்தில் தான் இருக்கிறது. அந்த சலூனின் பெரும் பகுதியை புத்தகங்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் காண்பவர்களுக்கு, இது நூலகமா? அல்லது சலூனா? என்று வியப்பு ஏற்படுகிறது. மேலும் கடையின் சுவர்களில் திருவள்ளுவர், காந்தியடிகள், பாரதியார், விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களின் படங்கள் பளிச்சிடுகின்றன. தமிழ் எழுத்துகள், உலக வரைபடம், எழுத்தாளர்களின் படங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கே காட்சி தருகின்றன. இதுகுறித்து சலூனை நடத்தி வரும் மில்லர்புரத்தை சேர்ந்த பொன்.மாரியப்பனை (வயது 39) சந்தித்து பேசினோம். ‘‘கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், காத்திருக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளட்டுமே என்ற நோக்கத்தில் தான் புத்தகங்களை கடையில் வாங்கி வைக்க தொடங்கினேன். நாளடைவில் அது குட்டி நூலகமாகவே மாறிவிட்டது’’ என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். இங்கு வரலாறு, காவியம், சிறுகதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் போன்றவை அதிகம் உள்ளதாகவும், அவற்றை படிக்கும் வாடிக்கையாளர்கள் மனநிறைவோடு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

புத்–த–கங்–கள் மீது ஈர்ப்பு

சலூன் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால் கடையின் சுவர்களில் தலைவர்களின் படங்களை வைத்தேன். எழுத்து தான் பொக்கி‌‌ஷம் என்று பாரதியார் குழந்தைகளிடம் கூறியதாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

அதுவே எனக்கு புத்தகங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவது புத்தகங்களே என்பதால் சலூனில் புத்தகங்களை வாங்கி வைக்கத்தொடங்கினேன்.

குட்டி நூல–கம்

எனது வருமானத்தில் மாதம் ரூ.1,000 புத்தகங்கள் வாங்குவதற்காக ஒதுக்கிவிடுவேன். புத்தக பிரியராக இருப்பதால், பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கம் சார்பில் புத்தகர் விருதை எனக்கு அளித்தனர். இந்த நூலகத்துக்கு எனது மனைவி இந்திரா மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

பொதுவாக கடைகளில் டி.வி. வைத்து இருந்தாலும், எப்.எம். ரேடியோக்கள் இருந்தாலும், மாணவர்கள் அதனை கவனிப்பது இல்லை. மாறாக செல்போன்களிலேயே மூழ்கி இருந்தனர். இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக முதலில் 5 புத்தகங்களை வாங்கி வைத்தேன். அதன்பிறகு பலரும் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததால், புத்தகங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. தற்போது 700-க்கும் அதிகமாக புத்தகங்களுடன் குட்டி நூலகமாக காட்சி அளிக்கிறது.

கட்–ட–ணத்–தில் சலுகை

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சலூன் கடைக்கு வரும் மாணவர்கள் இங்குள்ள புத்தகங்களில் தாங்கள் படித்த ஏதாவது ஒரு வரி அல்லது வாக்கியத்தை ஒரு நோட்டில் எழுத வேண்டும். அவ்வாறு எழுதியவர்களில் மாதம் தோறும் குலுக்கல் முறையில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து வருகிறேன். இந்த மாதம் 200 பேர் வரை பதிவு செய்து உள்ளனர்.

மேலும் மாணவர்களின் மேடை பேச்சாற்றலை வளர்க்கும் வகையில் கடையில் ஒரு மைக் வைத்து உள்ளேன். இங்கு வரும் மாணவர்களை அந்த மைக் மூலம் புத்தகங்களை சத்தமாக படிக்குமாறு கூறுவேன். மாணவர்கள் மைக்கில் படிக்கும்போது, தங்கள் குரலை தாங்களே கேட்பதோடு, அவர்களுக்கு மைக் முன்னால் நின்று பேசுவதற்கான பயம் போய்விடும். மேலும் இங்கு புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து வருகிறேன். இந்த பணியை விரிவுபடுத்தவும் முயற்சி செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story