காட்டுமன்னார்கோவிலில் குண்டும், குழியுமான நெடுஞ்சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


காட்டுமன்னார்கோவிலில் குண்டும், குழியுமான நெடுஞ்சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 29 Dec 2019 3:30 AM IST (Updated: 29 Dec 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் குண்டும்,குழியுமான நெடுஞ்சாலையால் அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள்.

காட்டுமன்னார்கோவில், 

சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் வகையில் காட்டுமன்னார்கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பிரதான சாலையான இதன் வழியாக தினசரி ஏராளமான பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் உருண்டோடி போய்விட்டதால், பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பெய்த பருவ மழைக்கு சாலை முழுவதும் கந்தலாகி போய்விட்டது. சிதம்பரத்தில் தொடங்கி காட்டுமன்னார்கோவில் அருகே சுமார் 25 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் விபத்துகள் என்பதும் தொடர்கதையாகி விட்டது.

மெய்யாத்தூர்-சிதம்பரம் இடையிலான சாலையில் உள்ள பள்ளங்களால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ஜெயராமன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது ஏறிஇறங்கியதில் ஜெயராமன் உயிரிழந்தார். இவ்வாறு உயிர்பலி வாங்கி வரும் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரைக்கும் 4 வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, புதிய சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, ஏற்கனவே உள்ள பழைய சாலையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நான்கு வழிச்சாலை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இவை அனைத்தையும் சரிசெய்து சாலை அமைப்பதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம். எனவே தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story