கோவில் கட்ட போலீசார் அனுமதி மறுப்பு: பவானி பாவடி திடலில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு
பவானி பாவடி திடலில் கோவில் கட்ட போலீசார் அனுமதி மறுத்ததால் பவானி பாவடி திடலில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பவானி,
பவானி நகரின் மையப்பகுதியில் பாவடி திடல் உள்ளது. இந்த திடல் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஒரு தரப்பினர் அந்த பகுதியில் கற்களை நட்டு வேலி அமைத்து உள்ளனர். இந்த நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு தற்போது கோா்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் பவானி பாவடி திடலில் கோவில் கட்டுவதற்காக செங்கல் மற்றும் கற்களை கொண்டு வந்து இரவோடு இரவாக குவித்தனர். பின்னர் கோவில் கட்டுவதற்கான பணியில் ஈடுபட தொடங்கினர்.
இதுபற்றி அறிந்ததும், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், அங்கு கோவில் கட்டவும் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் நடந்த சம்பவங்களை வக்கீல் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து உள்ளார். இதை துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தடுத்ததாக கூறப்படுகிறது. கோவில் கட்ட போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிைலயில் கோவில் கட்டே போலீசார் அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாவடி திடலில் ஒரு தரப்பினர் நேற்று கருப்புக்கொடிகளை ஏற்றினர். இதுபற்றி அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் நேற்று பவானிக்கு வந்தார். பின்னர் இதுகுறித்த பேச்சுவார்த்தை பவானி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் போலீசார் மற்றும் பாவடி திடலுக்கு சொந்தம் கொண்டாடும் ஒரு தரப்பினர் கலந்து கொண்டனர். அப்போது போலீசார் கூறுகையில், ‘பாவடி திடல் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு கோவில் கட்ட அனுமதி தர முடியாது. பாவு நூல் பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும்,’ என்றார். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story