உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்


உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 29 Dec 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல், 

கொடைக்கானல் ஒன்றியத்தில் நாளை (திங்கட்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில் மன்னவனூர் ஊராட்சி கவுஞ்சி கிராமத்தில் உள்ள வாக்காளர்களை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு கவுஞ்சி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை கண்டித்து அந்த கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதியானது.

இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

மேலும் பொது இடங்களில் கருப்புகொடியை ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story