சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேர் கைது


சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2019 10:30 PM GMT (Updated: 28 Dec 2019 8:27 PM GMT)

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை,

கோவையில் உள்ள விமான நிலையத்துக்கு இலங்கை, சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்தும், உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்கள் மூலம் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் உஷார் படுத்தப்பட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த வாலிபர்களை பிடித்து, அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர்.

ஆனால் அதற்குள் தங்கம் எதுவும் இல்லை. தொடர்ந்து ஒரு பைக்குள் இருந்த 2 சிறிய அட்டை பெட்டிகளை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதற்குள் சில பொருட்கள் இருந்தன. அதன் எடைக்கும், அட்டை பெட்டிகளின் எடைக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

இதனால் அதிகாரிகள் அந்த அட்டை பெட்டிகளை உடைத்தபோது, அதற்குள் அலுமினிய காகிதங்கள் போன்று தங்கத்தை உருக்கி வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அதில் இருந்த 1420 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.57 லட்சம் ஆகும்.

அந்த 2 வாலிபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் மும்பையை சேர்ந்த யூசுப் ஷேக் (வயது 32), அசீம் ஷாஜித் குர்ஷி (34) என்பதும், சார்ஜா உள்பட வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, யூசுப் ஷேக், அசீம் ஷாஜித் குர்ஷி ஆகியோர் கொண்டு வந்தது சுத்தமான தங்கம் ஆகும். அதன் மதிப்பும் அதிகம். பொதுவாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் தங்கத்தை கடத்தி வந்தால் அந்த நபர் கைது செய்யப்படுவார். தற்போது பிடிபட்ட 2 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.57 லட்சம் என்பதால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொ டர் ந்து இது தொட ர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story