ஆரணி கமண்டல நாகநதி ஆற்று பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்


ஆரணி கமண்டல நாகநதி ஆற்று பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்
x
தினத்தந்தி 29 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி கமண்டல நாகநதி ஆற்று பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆரணி, 

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 1 முதல் 18 வார்டுகள் வரை நகரை தூய்மை செய்வதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தனியார் துப்புரவு பணியாளர்கள் 113 பேர் வேலை செய்வதாக அறிவிக்கப்பட்டு சுமார் 30 நபர்கள் மட்டுமே பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் பணிகள் 3 இடங்களில் திறக்கப்பட்டது. இங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் கமண்டல நாகநதி ஆற்றில் மலை போல் குவித்து வருகின்றனர்.

மேலும் அக்குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்காக மயானத்திற்கு வரும் உறவினர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அவலநிலையும், அருகில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலையும் நிலவி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதேபோல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளையும் நகரின் எல்லைப் பகுதிகளான வந்தவாசி சாலை, வடுகசாத்து சாலை, போளூர் நெடுஞ்சாலை, ஆற்காடு நெடுஞ்சாலை, வேலூர் நெடுஞ்சாலை, முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை போன்ற பகுதிகளில் கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர்.

குப்பை சேகரிக்கும் கிடங்கு ஆரணி நகராட்சி பகுதியில் இல்லாததால்தான் குப்பைகளை கொண்டு நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அப்பணியும் கிடப்பில் உள்ளது.

நகர மக்களின் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே குப்பைகளை ஆங்காங்கே கொட்டி சுகாதார சீர்கேட்டையும், தீயிட்டு எரித்து நச்சுப்புகையால் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story