சிங்கம்புணரி அருகே, ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என வீடுதோறும் ஒட்டப்பட்ட சுவரொட்டி
மருதிபட்டி ஊராட்சியில் உள்ள வீடுகளில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வாக்காளர் மற்றும் வேட்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மருதிபட்டி ஊராட்சியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் தங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை வீடுகள்தோறும் வீட்டின் முன்பக்க சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனர். இதன்மூலம் வேட்பாளர்களிடமும், பொது மக்களிடமும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்குகளுக்காக வேட்பாளர்கள் பணம் கொடுப்பது தவறானது. நாங்கள் எங்கள் ஓட்டுகளை விற்கவில்லை. வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு தேவையானது சிறப்பான திட்டங்கள் முறையாக செய்து தரப்பட வேண்டும் என்பதே. பணம் வாங்காமல் வாக்களித்தால்தான் இந்த பகுதிக்கு தேவையான சுகாதாரம், தரமான கல்வி, சாலை வசதிகள், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிமை யோடு கேட்டுப்பெற முடியும்.
அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டால், அவர்கள் தவறுகள் செய்வதற்கு நாங்களே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்ற நிலைஉருவாகும்.
அதனை வலியுறுத்தி தான் இங்குள்ள வீடுகளில் “எங்கள் வாக்கு விற்பனைக்கு” அல்ல என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். வேட்பாளர்கள் பணம் கொடுப்பது எதற்காக என்பதை அறியாமல் ஒருசில மக்கள் வாங்கிக்கொள்கின்றனர்.
அவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டால் நாம் அவர்களிடம் எதையும் உரிமையோடு கேட்க முடியாது, இதனால் நம் சந்ததியினர் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தங்களது வாக்குகளை யாரும் விற்பனை செய்யாமல், உரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story