தற்கொலை முடிவில் இருந்த விவசாயியை சந்தித்து பேசிய முதல்-மந்திரி பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார்
வங்கி கடன் சுமையால் தற்கொலை முடிவில் இருந்த விவசாயியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
மும்பை,
வங்கி கடன் சுமையால் தற்கொலை முடிவில் இருந்த விவசாயியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
விவசாயி
நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி தானாஜி ஜாதவ் (வயது39). வங்கி கடன் சுமையால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்த இவர் கடைசியாக முதல்-மந்திரியை சந்தித்து உதவி கேட்க முடிவு செய்து, மும்பை வந்தார். ஆனால் முதல்-மந்திரியை சந்திக்க முடியாமல் 2 நாட்களை மும்பை தெருக்களிலேயே கழித்து உள்ளார்.
இந்தநிலையில், தானாஜி ஜாதவின் நிலையை அறிந்த பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் நர்வேகர் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவர் அந்த விவசாயியை அழைத்து பேசி முதல்-மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்து உள்ளார்.
முதல்-மந்திரி உறுதி
இதையடுத்து விவசாயி தானாஜி ஜாதவ், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது முதல்-மந்திரி விவசாயியின் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து விவசாயி தானாஜி ஜாதவ் கூறுகையில், ‘‘நான் விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் வறட்சி, பருவம் தவறிய மழையால் விவசாயம் பொய்த்து போனதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே எனது நிலத்தை விற்று வங்கி கடனை அடைக்க நினைத்தேன். ஆனால் வங்கி அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் எனது வங்கி கடன் அதிகரித்து கொண்டே போனது. இந்த நிலையில் முதல்-மந்திரியை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது. அவர் என்னிடம் 15 நிமிடம் பேசினார். இதையடுத்து நாந்தெட் கலெக்டர் சந்திக்க வருமாறு என்னை அழைத்துள்ளார். முதல்-மந்திரி உணர்ச்சிவசப்பட கூடியவர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அவர் அமைதியானவர். முதல் முறையாக அவர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது எவ்வளவு அக்கறை செலுத்துகிறார் என்பதை பார்த்தேன். இல்லையென்றால் ஏன் அவர் ஒரு தனிநபரை அழைத்து பேச வேண்டும்?. அவருடனான சந்திப்பு மனநிறைவை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story