நாளை மறுதினம் இரவு நடனம், இசைக்கச்சேரி, விருந்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகிறது, புதுச்சேரி


நாளை மறுதினம் இரவு நடனம், இசைக்கச்சேரி, விருந்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகிறது, புதுச்சேரி
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 10:24 PM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி தயாராகி வருகிறது. நாளை மறுதினம் இரவு நடனம், இசைக்கச்சேரி என கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து வருவதால் ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

புதுச்சேரி,

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் இதர ஓட்டல் உரிமையாளர்களின் கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வருவாய் அதிகாரிகள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தினை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேளிக்கை நிகழ்ச்சிகள்

புதுவையில் அனேக ஓட்டல் உரிமையாளர்கள் நகராட்சி சட்டத்தின்கீழ் வர்த்தக உரிமம் பெற்று ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஆனால் பல ஓட்டல்களில் வார கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக நடன விருந்து, மெல்லிசை, இசைக் கச்சேரி, டிஸ்கொதே, பாப் இசை போன்ற நிகழ்ச்சிகளாகும். மேலும் வருகிற புத்தாண்டை முன்னிட்டு விருந்து மற்றும் மேற்குறிப்பிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

வர்த்தக உரிமம் ரத்து

எந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியும் புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட எந்த பகுதியில் நடத்துவது என்றாலும் அதற்கு நகராட்சிகள் சட்டம் 348 மற்றும் 349 ஆகிய பிரிவு களின் கீழ் கேளிக்கை உரிமம் பெறுதல் வேண்டும். அத்துடன் புதுச்சேரி (கேளிக்கை வரி) விதிகள் 1976-ன்படி அனுமதிக்கப்படும் அல்லது வசூலிக்கப்படும் கட்டணத்தில் 25 சதவீதத்தை நகரட்சிக்கு கேளிக்கை வரியாக செலுத்த வேண்டும்.

இது சட்டப்படி கட்டாய கடமையாகும். எனவே ஓட்டல் உரிமையாளர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நகராட்சி சட்ட விதிகளின்படி கேளிக்கை உரிமம் பெற்று உரிய கேளிக்கை வரியை நகராட்சிக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கேளிக்கை வரி செலுத்தாவி்ட்டால் அது வரி ஏய்ப்பு குற்றமாக கருதி அவர்களின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story