மங்கலம் அருகே, பாறைக்குழிக்குள் கார் பாய்ந்து தொழிலதிபர் பலி


மங்கலம் அருகே, பாறைக்குழிக்குள் கார் பாய்ந்து தொழிலதிபர் பலி
x
தினத்தந்தி 29 Dec 2019 4:45 AM IST (Updated: 29 Dec 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே பாறைக்குழிக்குள் கார் பாய்ந்துதொழிலதிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மங்கலம், 

திருப்பூர் மங்கலத்தை அடுத்த குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது41). தொழிலதிபர். இவருடைய மனைவி ராதிகா (37). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியத்திற்கு அதே பகுதியில் சொந்தமாக கல் உடைக்கும் ஆலை உள்ளது. இதன் அருகே பாறைக்குழி உள்ளது. 80 அடி ஆழம் கொண்ட பாறைக்குழியில், 20அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இவருடைய கல் உடைக்கும் ஆலையில் 16 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல் உடைக்கும் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

பின்னர் நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது கல் உடைக்கும் ஆலைக்கு அருகே உள்ள பாறைக்குழியில் பாலசுப்பிரமணியத்தின் கார் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் பாறைக்குழி தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த காரை மீட்டனர். அப்போது காருக்குள் பாலசுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலசுப்பிரமணியத்தின் மனைவி ராதிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராக்கியபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலையில் சென்றதாக தெரியவந்தது. இதனால் வீ்ட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரணியம் அன்று இரவு 8 மணிக்கு கல் உடைக்கும் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்களா? என பார்வையிட, காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார். அவருடைய கார், கல் உடைக்கும் ஆலை அருகே உள்ள பாறைக்குழி ஓரமாக சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பாறைக்குழிக்குள் பாய்ந்துள்ளது. இதனால் காருடன் தண்ணீரில் மூழ்கி் பாலசுப்பிரமணியம் இறந்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story