பவானியில் சுற்றித்திரியும் குதிரைகளால் போக்குவரத்து பாதிப்பு
பவானியில் சுற்றித்திரியும் குதிரைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானி,
பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்களின் போது பக்தர்கள் பலர் கோவிலுக்கு குதிரைகளை நேர்த்திக்கடனாக செலுத்துவது உண்டு. அவ்வாறு செலுத்தப்படும் குதிரைகளை கோவில் நிர்வாகம் சரிவர பராமரிப்பதில்லை.
மேலும் பவானி நகர் பகுதிகளில் ஒரு சிலர் தாங்கள் வளா்க்கும் குதிரைகளை உணவுக்காக அவிழ்த்து விடுகின்றனர். இதனால் குதிரைகள் ரோட்டோரம் வளர்ந்து உள்ள புற்கள் மற்றும் செடி, கொடிகளை மேய்கின்றன. இதன்காரணமாக குதிரைகள் பவானி அந்தியூர் பிரிவில் இருந்து புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோட்டில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, வரதநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ரோட்டில் சுற்றித்திரிவதுடன் விவசாய நிலங்களில் புகுந்து பயிரிட்டு உள்ள வாழை, மஞ்சள் பயிர்களையும் சேதப்படுத்தி விடுகின்றன.
சில நேரங்களில் ரோட்டின் நடுவில் குதிரைகள் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை கால்களால் எட்டி உதைத்து தள்ளி விடுகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர்.
எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story