பாஸ்போர்ட், விசா இன்றி ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபர் கைது


பாஸ்போர்ட், விசா இன்றி ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2019 10:45 PM GMT (Updated: 29 Dec 2019 4:13 PM GMT)

பாஸ்போர்ட் மற்றும் விசா இன்றி, ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு ரெயில் நிலையத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து, ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிரமாக ரோந்து வருகிறார்கள். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேடை பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததோடு, தன்னை பற்றி எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் ரெயில்வே போலீசார் அவரை பிடித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அண்டை நாடான வங்காளதேசம் டாக்கா ேஜாஸ்கரே கியாம் கோலா பகுதியை சேர்ந்த நோனிகோபால் என்பவருடைய மகன் உஜ்ஜல்குமார் (வயது 29) என்பதும், அவரிடம் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் உஜ்ஜல்குமார் வங்காளதேசத்தில் இருந்து மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து குர்லா விரைவு ரெயில் மூலமாக ஈரோட்டிற்கு வந்ததும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ஈரோடு 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Next Story