உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அரசு மரியாதையுடன் பெஜாவர் மடாதிபதி உடல் அடக்கம்


உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அரசு மரியாதையுடன் பெஜாவர் மடாதிபதி உடல் அடக்கம்
x
தினத்தந்தி 30 Dec 2019 5:00 AM IST (Updated: 29 Dec 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி நேற்று மரணம் அடைந்தார்.

மங்களூரு, 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிரசித்தி பெற்ற பெஜாவர் மடம் உள்ளது.

மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி

இந்த மடத்தின் மடாதிபதியாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி(வயது 88) இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று பின்னர் மடத்திற்கு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சுவாமியின் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

தீவிர சிகிச்சை

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் இருந்தும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் கே.எம்.சி. மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இதையடுத்து மடாதிபதியின் கடைசி ஆசைப்படி அவரை நேற்று முன்தினம் இரவு மடத்தின் நிர்வாகிகள் பெஜாவர் மடத்தில் உள்ள அதோக்‌ஷஜ மட ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு 6 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மரணம்

முடிவில் அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலையில் அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டனர். அப்போது மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.20 மணிக்கு மரணம் அடைந்தார்.

இதனால் பெஜாவர் மடமே சோகத்தில் மூழ்கியது. மேலும் கர்நாடகத்தில் உள்ள பெஜாவர் மடத்தின் பக்தர்களும், மற்ற மடாதிபதிகளும், அரசியல் தலைவர்களும் சோகமடைந்தனர். ஏராளமான பக்தர்கள் உடனடியாக பெஜாவர் மடத்திற்கு திரண்டு வந்து கண்ணீர்விட்டு கதறி அழுதபடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மடத்தில் மடாதிபதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது மட்டுமல்லாமல் பல்வேறு பூஜைகளும் செய்யப்பட்டன. மடாதிபதியின் உடல் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்டது. பின்னர் மடத்தில் தவக்கோல நிலையில் வைத்து ஆரத்தி எடுத்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அஷ்ட மடங்களின் மடாதிபதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி உடல் அஜ்ஜிரக்காடு மைதானத்தில் உள்ள கோவில் குளத்தில் குளிப்பாட்டப்பட்டது.

முதல்-மந்திரி எடியூரப்பா அஞ்சலி

இந்த நிலையில் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடுப்பியிலேயே முகாமிட்டிருந்த முதல்-மந்திரி எடியூரப்பா, மடாதிபதி இறந்த செய்தி கேட்டதும் உடனடியாக பெஜாவர் மடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் மடாதிபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திரி பசவராஜ் பொம்மை, ஷோபா எம்.பி., பெஜாவர் மடத்தின் மூத்த நிர்வாகி விஸ்வ பிரசன்ன சுவாமி மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பெஜாவர் மடாதிபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ ஹெலிகாப்டரில்...

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கு மடாதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மதியத்திற்கு பிறகு பெஜாவர் மடத்தில் இருந்து அவருடைய உடல், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பியில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வைத்து அவருடைய உடலை, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டவர்கள் பெற்றனர்.

பிறகு அங்கிருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மடாதிபதியின் உடல் வைக்கப்பட்டு, சாலை வழியாக பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

அங்கு பிரதமர் மோடி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், ஷோபா எம்.பி., எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்-நடிகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு மாலை 6 மணியளவில் மடாதிபதியின் உடல் அங்கிருந்து, திறந்த வாகனத்தில் பெங்களூரு கத்ரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள வித்யாபீடத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு மடாதிபதியின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அப்போது கர்நாடக அரசு சார்பில் முதல்-மந்திரி எடியூரப்பா, சாலூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, சரவணபெலகோலா ஜெயின் மடாதிபதி சாருகீர்த்தி பட்டாகரக்கா சுவாமி உள்பட பல்வேறு மடாதிபதிகளும் விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய மந்திரி உமா பாரதி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பெஜாவர் மடத்தின் சம்பிரதாய முறைப்படி பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. அதையடுத்து அவரது உடல், வித்யாபீடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மோடி இரங்கல்

மேலும் விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story