திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு


திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

திருவரங்குளம்,

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 203 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள், தாள் முத்திரை, அழியாத மை உள்ளிட்ட 72 வகையான தேர்தல் தளவாட பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் அதிகாரி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல மாவட்டத்தில் உள்ள அரிமளம், திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்கள்

இன்று தேர்தல் நடைபெறும் மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் கம்புகள் கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story