விஸ்வேசுவர தீர்த்த சுவாமியை போன்று இன்னொருவர் இனிமேல் வருவது அபூர்வம் எடியூரப்பா புகழஞ்சலி
விஸ்வேசுவர தீர்த்த சுவாமியை போன்று இன்னொருவர் இனிமேல் வருவது அபூர்வம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மங்களூரு,
விஸ்வேசுவர தீர்த்த சுவாமியை போன்று இன்னொருவர் இனிமேல் வருவது அபூர்வம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
உடுப்பியில் மறைந்த மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு மரியாதையுடன் அடக்கம்
பெஜாவர் மடத்தின் மடாதிபதியான விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மரணம் அடைந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் இறப்பையொட்டி மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் அவருடைய உடல் பெங்களூருவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
எனக்கு அவரை சுமார் 50 வருடங்களாக தெரியும். அவருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் அவரை சந்தித்து ஆசி பெற்று செல்வேன். கடந்த ஒரு மாதமாக அவர் என்னை பெங்களூருவில் உள்ள தன்னுடைய மடத்தில் வந்து சந்திக்கும்படி அவர் கூறியிருந்தார்.
ரூ.10 கோடி
அதன்படி நான் அவரை சந்தித்தேன். அப்போது சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், தான் ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்க உள்ளதாகவும், அதற்கு ரூ.10 கோடி தேவைப்படுவதாகவும் கூறினார். அந்த நிதியை நான் அவருக்கு உடனடியாக வழங்கினேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் என்னை ஏதாவதொரு வகையில் அவர் காப்பாற்றி வந்துள்ளார்.
மடத்தில் ராமர் கோவில் கட்ட பல்வேறு எதிர்ப்புகள் நிகழ்ந்தபோது, அதை மீறி கோவில் கட்டப்பட்டது. அப்போது அங்கு ராமர் சிலையை நிறுவ சென்ற மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி தலைமையிலான 12 பேரில் நானும் ஒருவன். நான் அவருடன் நிரந்தர தொடர்பு வைத்திருந்தேன்.
இனிமேல் வருவது அபூர்வம்
அவரைப்போன்று ஒரு மடாதிபதி இனிமேல் வருவது அபூர்வம். நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று தர்ம காரியங்கள், சேவைகள் செய்துள்ளார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோதும் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றார்.
இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story