விஷ்வ இந்து பரிஷத்துடன் சேர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்டவர், விஸ்வேசுவர தீர்த்த சுவாமி


விஷ்வ இந்து பரிஷத்துடன் சேர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்டவர், விஸ்வேசுவர தீர்த்த சுவாமி
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-30T00:38:54+05:30)

மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்டு வந்தார். மேலும் தமிழகத்தில் நடந்த மத மாற்றத்தையும் அவர் எதிர்த்தவர் ஆவார்.

பெங்களூரு, 

மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்டு வந்தார். மேலும் தமிழகத்தில் நடந்த மத மாற்றத்தையும் அவர் எதிர்த்தவர் ஆவார்.

கிருஷ்ணர் கோவிலில் பூஜை

உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி(வயது88) உடுப்பியில் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அங்கு அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மடாதிபதியின் உடல் பெங்களூரு கொண்டு வரப்பட்டது. பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து மடாதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த விஸ்வேசுவர தீர்த்த சுவாமி, சம்பா விஜயா என்ற பெயரில் சமஸ்கிருத கவிதையை எழுதினார். 25-வது வயதில் அகமத்ராய மாநாட்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாநாடு மைசூரு மகாராஜாவால் நஞ்சன்கூடுவில் நடத்தப்பட்டது. உடுப்பியில் கிருஷ்ண மடத்திற்கு உட்பட்ட ‘அஷ்ட‘ (8) மடங்கள் உள்ளன. அங்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை கிருஷ்ணர் கோவிலில் பூஜை செய்யப்படுகிறது.

இளைய மடாதிபதி

அந்த பூஜையை தலைமையேற்று நடத்த, 8 மடங்களின் மடாதிபதிகளுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி ஒருவர் பூஜை செய்துவிட்டால், அடுத்த முறை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும். அதற்கு ‘பர்யாயா‘ என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் மறைந்த மடாதிபதி, 1952, 1968, 1984, 2000 மற்றும் 2016-ம் ஆண்டு என 5 முறை பூஜையை செய்து சாதனை படைத்துள்ளார். கடைசியாக அவர் 2016-ம் ஆண்டு வயதை காரணம் காட்டி தனது இளைய மடாதிபதியை அந்த பூஜையை செய்ய கேட்டுக் கொண்டார். ஆனால் இளைய மடாதிபதி மறுக்கவே, விஸ்வேசுவர தீர்த்த சுவாமியே அந்த பூஜையை செய்தார்.

1956-ம் ஆண்டு அவர் பெங்களூருவில் பர்னபிரஜ்னா வித்யாபீடம் என்ற பெயரில் ஒரு குருகுலத்தை தொடங்கினார். பழமையான பண்பாட்டையும், மத்வாச்சாரியாவின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலும் அந்த குருகுலத்தை தொடங்கினார். மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ண மடத்தின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து அளித்தார். மேலும் முஸ்லிம்கள் அங்கேயே ‘நமாஸ்‘ செய்து வழிபாடு நடத்தினர்.

நெருக்கமான தொடர்பு

இந்த பகுதி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று மடாதிபதி வேண்டுகோள் விடுத்தார். மடாதிபதி இப்தார் விருந்து அளித்ததற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புடன் மடாதிபதி நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர், தலித்துகளும் இந்து மதத்தின் ஒரு பகுதியினர் என்று கூறினார். தலித் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று, அவர்களுடன் உரையாடியது, குறைகளை கேட்டது உட்பட பல்வேறு சமூக பணிகளையும் அவர் ஆற்றினார். அவர் இந்து மதத்தை பலமாக போற்றி வந்தார். பசுக்களை பாதுகாக்க உறுதியான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். விஷ்வ இந்து பரிஷத்துடன் சேர்ந்து அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதற்காக நடந்த போராட்டங்களையும் அவர் ஆதரித்தார்.

தலித்துகள் மத மாற்றம்

தேசிய அளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். மடாதிபதிகள் அரசியலுக்கு வருவதை அவர் எதிர்த்தார். அது அவர்களின் மேன்மையில் சமரசத்திற்கு வழிவகுத்துவிடும் என்று அவர் கூறினார். நியாய வேதாந்தம் உள்ளிட்ட தத்துவங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். மிகுந்த மென்மையாக பேசும் குணம் கொண்ட அவர், கடுமையான முடிவுகளை எடுப்பதில் தயங்காமல் செயல்பட்டவர்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை அவர் பலமாக எதிர்த்தார். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் மதம் மாற்றம் நடந்தபோது, அதை எதிர்த்து குரல் கொடுத்தார். அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோது, டெல்லியில் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார். தீர்ப்புக்கு பிறகு சாதகமாக தீர்ப்பு வந்தவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உமா பாரதி, மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியிடம் இருந்து சன்னியாசி தீட்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story