ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநாட்டிற்கு பிறகு அறிவிக்கப்படும்


ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநாட்டிற்கு பிறகு அறிவிக்கப்படும்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-30T00:52:08+05:30)

ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநாட்டிற்கு பிறகு அறிவிக்கப்படும் என்று புதுக்கோட்டையில் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

புதுக்கோட்டை,

நடிகர்கள் நட்சத்திரமாக மின்னுவதற்கு வணிகர்களும் ஒரு காரணமாக உள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் நடிப்பதற்கு தான் நாங்கள் எதிர்க்கிறோம். நடிகர்கள் பொருளின் தரம் பார்த்து நடிப்பதில்லை. பணம் பார்த்து நடிக்கின்றனர். அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்.

இல்லையென்றால் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வியில்தான் முடியும். இதற்கு ‘சங்கத் தமிழன்‘படம் ஒரு உதாரணம். அதை நாங்கள் நிரூபித்துக் காட்டி உள்ளோம். நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் விளம்பர படத்தில் நடித்ததற்காக எங்களிடம் இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. எங்களை சந்தித்து பேசுவதாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை பேசவில்லை. தமிழகத்தில் வணிகர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அடுத்த கட்ட போராட்டம்

நாங்கள் ஜி.எஸ்.டி வரியை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால் அதில் உள்ள சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர சொல்கிறோம். 89 முறை கவுன்சில் கூட்டங்களில் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது. சாதாரண வியாபாரிகளின் நிலையையும், ஜி.எஸ்.டி.யால் அபராதம் விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. விண்ணப்பத்தை தெரிந்து கொள்ளவே வியாபாரிகள் வணிகத்தை விட்டு கணக்காளர்களாக மாற வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

தனியார் ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வணிகர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர். வருகிற ஜனவரி மாதம் 6, 7, 8-ந் தேதிகளில் டெல்லியில் அகில இந்திய அளவில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கின்றனர். அந்த மாநாட்டிற்கு பின்னர் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து தீர்க்கமான முடிவெடுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story