திருப்போரூர் முருகன் கோவில் ஆதீனமாக வாலிபருக்கு பட்டம் சூட்ட முயற்சி - பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


திருப்போரூர் முருகன் கோவில் ஆதீனமாக வாலிபருக்கு பட்டம் சூட்ட முயற்சி - பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-30T01:43:23+05:30)

திருப்போரூர் முருகன் கோவில் ஆதீனமாக வாலிபருக்கு பட்டம் சூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்து அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் சிதம்பரசுவாமிகளால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு 13 ஆதீனங்கள் இந்த கோவிலை நிர்வகித்துள்ளனர்.

இந்த கோவிலுக்கு சொந்தமாக சென்னை, காஞ்சீபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சொத்துகள் உள்ளன. திருப்போரூரில் மட்டும் 680 ஏக்கர் நிலமும் 64 தர்ம சத்திரங்களும் உள்ளன. ஆனால் காலப்போக்கில் அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முருகன் கோவிலுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

இந்த கோவிலை நிர்வகித்து வந்த ஆதீனங்கள் திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சிதம்பர மடத்தில் தங்கி பூஜைகளை செய்வது வழக்கம். அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களின் உடல்கள் இந்த மடத்தில் தான் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து இந்த மடத்திற்கு குருபூஜை மற்றும் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கு தியானம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 14-வது ஆதீனமாக இருந்த சிதம்பர சிவஞான சுவாமிகள், 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார். புதிய ஆதீனத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் ஆதீனம் என்ற பெயரில் யாரையாவது அழைத்து வந்து பட்டம் ஏற்க செய்வதும் அதை கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. 14-வது பட்டமாக இருந்து மறைந்த சிதம்பர சிவஞான சுவாமிகளின் மகன் முருகன், மருமகன் ஆகியோர் ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்ள முயற்சித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். இந்த நிலையில் நேற்று காலை 8 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென சிதம்பர மடத்திற்குள் நுழைந்து “யாகம் செய்கிறோம்” எனக்கூறி வாலிபர் ஒருவருக்கு திருப்போரூர் முருகன் கோவில் ஆதீனமாக பட்டம் சூட்ட முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அங்கு திரண்டனர்.

யாருடைய அனுமதியுடன் இங்கு வந்துள்ளர்கள்? ஆதீனம் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது உள்ளூர் கிராமமக்களின் ஆதரவு இல்லாமல் எப்படி பட்டம் சூட்ட வந்தீர்கள்? என அவர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் கேள்வி எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த திருப்போரூர் போலீசார், அந்த கும்பலை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த கும்பலில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன்(வயது 36) என்பவர் ஆதீனமாக பட்டம் சூட்ட முயன்றது தெரியவந்தது. அவருடன் வந்த சிவக்குமார்(25) என்பவர் சிதம்பரம் கோவில் தீட்சிதர் என போலீசாரிடம் கூறினார். இவர்கள் மற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

ஆதீனமாக பட்டம் சூட்ட வந்த முத்துக்குமரன், “திருப்போரூர் முருகன் கோவில் 14-வது பட்டமாக இருந்தவர் தனக்கு 2006-ம் ஆண்டு தீட்சிதை கொடுத்து அவருக்கு பிறகு இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தார்” எனக்கூறி ஒரு ஆவணத்தை போலீசாரிடம் காண்பித்தார். ஆனால் கிராமமக்கள் அது போலியாக தயாரித்ததாக தெரிவித்தனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகத்தின் சார்பில் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

இதுவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க விரைவில் பொதுநல வழக்கு தொடர உள்ளோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர் .

Next Story