பொதுப்பணித்துறை ஊழியர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம்


பொதுப்பணித்துறை ஊழியர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறை ஊழியர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). பொதுப்பணித்துறை ஊழியர்.இவரை கடந்த மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக பாண்டியன் மகன் கோகுல் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் பாண்டியன், தாய் மல்லிகா, அக்காள் பிரபா உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் மனைவி சுகுணா மற்றும் உறவினர்கள் நேற்று காலை முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

கணவரின் சாவுக்கு நீதிகேட்டு போலீஸ் நிலையம் வந்த மனைவியால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story