“தினத்தந்தி” செய்தி எதிரொலி கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடையநல்லூர்,
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் சொக்கம்பட்டி, கடையநல்லூர், இலத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் இந்த தொடர் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தினத்தந்தியில் கடந்த 27-ந் தேதி செய்தி பிரசுரமாகியது. அதன் எதிரொலியாக சொக்கம்பட்டியில் இருந்து கடையநல்லூர் முடியும் வரை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றுவதற்காக நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து காலை 7 மணி வரை சாலையை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாலை விரிவாக்கம்
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடையநல்லூரில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இவைகளை அப்புறப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனை, பஸ்நிலையம் அருகில் உள்ள பாப்பான் கால்வாய் பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. அதுபோல் விபத்து பகுதியில் எச்சரிக்கை கோடு போடப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை பிரானூர் பார்டர் வரையுள்ள சந்திப்பு சாலைகள் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும். மேலும் புளியங்குடியில் இருந்து கடையநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை சரிசெய்யப்படும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பழமையான மரங்கள் அப்புறப்படுத்தப்படும். சிறிய மரங்களை வேரோடு அகற்றி வேறொரு இடத்தில் நடப்படும் என்றனர்.
Related Tags :
Next Story