மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு
மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது.
நெல்லை,
மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது.
பாதுகாப்பு மாநாடு
நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் அலி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி வரவேற்று பேசினார். மாநாட்டை மாநில செயலாளர் அகமது நவவி தொடங்கி வைத்தார்.
நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாணவர்கள் போராட்டம்
மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசுகையில் கூறியதாவது:-
பாபர் மசூதியை இடித்த அத்வானி இன்று காணாமல் போய் விட்டார். தமிழகத்தில் பாரதீய ஜனதாவை மக்கள் நம்பவில்லை. அதனால் ஓட்டு போட மறுத்து விட்டனர். ஆனால் அறியாமையில் உள்ள வடமாநிலத்தவர்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து விட்டனர். தற்போது மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிராக டெல்லி முதல் குமரி வரை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும், பிற மதத்தினருக்கும் இடையே உள்ள உறவு முறை வடக்கே உள்ளவர்களுக்கு தெரியாது. மத்தியில் ஆட்சியில் உள்ள முட்டாள்களை அகற்ற வேண்டும். இதற்காக இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை. இறைவனிடம் வேண்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேல்முருகன் பேசுகையில், ‘‘பாரதீய ஜனதா அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதனால் பல மாநிலங்களில் ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 39 இடங்களில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு தோல்வியை அளித்தோம். தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காணாமல் போகச் செய்ய அனைவரும் தயார் நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.
போராட்டம் தொடரும்
நெல்லை முபாரக் பேசும் போது கூறியதாவது:-
பல்வேறு நாட்டின் சர்வாதிகாரிகளுக்கு உலகம் வழங்கிய தீர்ப்பை மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு வழங்குவோம். எங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றே தீருவோம். இதுவரை பாசிசத்தை மட்டுமே எதிர்த்து வந்தோம், இனி பாசிசத்துக்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி போன்றவர்களை எதிர்த்து போராடுவோம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்க ஆவணங்கள் கேட்டால் தரமாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும். ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை விட்டு போக மாட்டோம். ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கி உள்ளோம். மத்திய அரசில் இருந்து பாரதீய ஜனதாவை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் மனதில் இருந்தும் அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அ.தி.மு.க.வின் அழிவு இதில் இருந்து தொடங்கி விடும். நாங்கள் அனைத்து தரப்பினருடனும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம். ஆனால் நீங்கள் அப்படி வாழ வேண்டாம் என்று நினைத்தால் உங்களை விடமாட்டோம். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை புறக்கணிப்போம் என்று மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் நெல்லை மாவட்ட தலைவர் கனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story