குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஈரோட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஈரோட்டில் கோலம் போட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சென்னையில் பெண்கள் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் வீடுகள் முன்பு கோலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரையும்படி கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளின் முன்பு கோலம் போட்டிருந்தனர்.
ஈரோட்டில், செங்கோடம்பாளையம் யாழ் நகர் பகுதியில் தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார், ஷோபியா, ராஜாத்தி, செல்வி, பிரேமா ஆகியோர் தங்களது வீடுகளின் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டிருந்தனர். ‘வேண்டாம் குடியுரிமை திருத்தம் சட்டம்’, ‘நோ சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வீரமணி ஜெயக்குமார் கூறும்போது, ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் கோலம் போட்டுள்ளோம். இதுபோன்று சென்னையில் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். கருத்து கூறுவது எங்களது உரிமை. எங்கள் உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம்’ என்றார்.
இதேபோல் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் லட்சுமி வீடு உள்பட பல்வேறு வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story