மாவட்ட செய்திகள்

ரூ.25 லட்சம் கேட்டு ரவுடி மிரட்டல்: கடத்தல் நாடகமாடிய தொழில் அதிபர் கைது + "||" + Rowdy Threat The kidnapping dramatized Business Inspector arrested

ரூ.25 லட்சம் கேட்டு ரவுடி மிரட்டல்: கடத்தல் நாடகமாடிய தொழில் அதிபர் கைது

ரூ.25 லட்சம் கேட்டு ரவுடி மிரட்டல்: கடத்தல் நாடகமாடிய தொழில் அதிபர் கைது
ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி ரவுடி கடத்தியதாக நாடகமாடிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகேஷ்(வயது 30). தொழில் அதிபரான இவர், வில்லிவாக்கம் ஐ.சி.எப். சாலையில் காருடன் நின்ற தன்னை, ரவுடி தில் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.25 லட்சம் கேட்டு தன்னை தாக்கியதாகவும், பின்னர் கத்திமுனையில் தன்னை காரில் கடத்திச் சென்றபோது, அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.


தனது கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை அவர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகவும் புகாரில் கூறி இருந்தார். அதன்பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர்.

தில் பாண்டி தலைமறைவான நிலையில் வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த அவரது கூட்டாளி பிரகாஷ்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

தில் பாண்டியும், முகேசும் நெருங்கிய நண்பர்கள். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு இருவரும் போதையில் இருந்தனர். இதனால் தில் பாண்டி தனது கூட்டாளியான பிரகாசை காரை ஓட்டும்படி கூறினார்.

அதன்படி பிரகாஷ் காரை ஓட்டினார். காரின் பின்பக்க இருக்கையில் தில் பாண்டியும், முகேசும் அமர்ந்துகொண்டு மது அருந்தியபடியே பயணம் செய்தனர். திடீரென அவர் களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. காருக்குள்ளேயே இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

உடனே முகேஷ், ஓடும் காரில் இருந்து கீழே குதிக்க முயன்றார். இதனால் பிரகாஷ், காரை மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய முகேஷ், நேராக மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்குள் சென்று விட்டதாக பிரகாஷ் கூறினார்.

ஆனால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த முகேஷ், தன்னை ரவுடி தில் பாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி கடத்தியதாக பொய் புகார் அளித்தது உறுதியானது.

இதையடுத்து பொய்யான புகார் கொடுத்து, கடத்தல் நாடகமாடிய தொழில் அதிபர் முகேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் விசாரணையில் முகேஷ் மீது செங்குன்றம், எண்ணூர், எழும்பூர், அம்பத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், கர்நாடக மாநிலத்தில் லாரியை ஏற்றி 3 பேரை கொன்றதாகவும் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.

அத்துடன் முகேஷ், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரின் நெருங்கிய கூட்டாளி என்பதும் தெரியவந்தது. முகேசின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகேசும், தில் பாண்டியும் குடிபோதையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போலவும், இருவரும் சேர்ந்து இருப்பது போலவும் பல்வேறு புகைப்படங்கள் இருந்தன.

யார் பெரிய ஆள்? என்ற மோதலில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காரை முகேசின் வீட்டில் தில்பாண்டி விட்டுச் சென்றதும் தெரிந்தது. தலைமறைவான தில் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.