கடம்பத்தூர் ஒன்றியத்தில் சூறையாடப்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு


கடம்பத்தூர் ஒன்றியத்தில் சூறையாடப்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:15 AM IST (Updated: 30 Dec 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சாவடியை சூறையாடி, வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைத்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 27-ம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் 83 மற்றும் 84 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

மேலும், அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மிரட்டி வாக்குச்சீட்டுகளை வெளியே கொண்டுவந்து தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தால் மேற்கண்ட 2 வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்கண்ட இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு நேற்று காலை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் வாக்களிப்பதற்காக பொதுமக்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை போலீசார் ஒழுங்குபடுத்திய பின்னரே வாக்களிக்க அனுமதித்தனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததால் நேற்று பாப்பரம்பாக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மறுதேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

மேலும் பாப்பரம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இரண்டு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு, அதன் மூலம் அவர்கள் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரப்பட்டு ஓட்டளித்து சென்றனர்.

Next Story