குழந்தை கொலை வழக்கில், 3-வது கணவனுடன் தாய் கைது - திருமணத்துக்கு தடையாக இருந்ததால் கொன்றதாக வாக்குமூலம்


குழந்தை கொலை வழக்கில், 3-வது கணவனுடன் தாய் கைது - திருமணத்துக்கு தடையாக இருந்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:00 AM IST (Updated: 30 Dec 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய், 3-வது கணவனுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு தடையாக இருந்ததால் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுக்கம்பாறை, 

வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே கம்மவான்பேட்டையில் உள்ள மொட்டை மலையில் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கோவில் கட்டும் பணிக்கு சென்றவர்கள் அங்குள்ள ஒரு பள்ளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன பெண்குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சென்று பார்த்தனர். அப்போது குழந்தையை கொலைசெய்து அதன்மீது பெரிய பாறாங்கல்லை போட்டிருப்பது தெரியவந்தது. உடல் அழுகியநிலையில் இருந்ததால் அங்கேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட குழந்தை யாருடையது? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆற்காடு அருகே தாழனூரை சேர்ந்த குழந்தை ஒன்றை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. மேலும் அந்த குழந்தையின் தாய்மீது சந்தேகம் இருப்பதாகவும் ஒருவர் தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆற்காடு தாலுகா வரகூரில் இருந்த மஞ்சுளா (வயது23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். அதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது 3-வது திருமணத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஆற்காடு அருகே வரகூர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும், அவருடைய மாமாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. மஞ்சுளா அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது தேனியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணமான ஒரு மாதத்தில் மஞ்சுளா, தனது கணவரை விட்டு பிரிந்து பாண்டியராஜனுடன் சென்று திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சிந்து என பெயர்வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வரகூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டியராஜனைவிட்டு பிரிந்து ராஜாமணியுடன் வந்துவிட்டார்.

ராஜாமணியை அவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு ராஜாமணி உனக்கு ஏற்கனவே திருமணமானது எங்கள் வீட்டுக்கு தெரிந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் குழந்தையை கொன்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறி உள்ளார். எனவே திருமணத்திற்கு குழந்தை தடையாக இருந்ததால் அதை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மொட்டைமலைக்கு சென்று கடந்த 22-ந் தேதி குழந்தையை கழுத்தைநெரித்து கொன்று பள்ளத்தில் வீசிவிட்டு, அடுத்தநாள் 23-ந் தேதி அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு சென்று எதுவும் நடக்காததுபோன்று இருந்துள்ளனர்.

மேற்கண்டவாறு மஞ்சுளா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரையும், அவருடைய 3-வது கணவர் ராஜாமணியையும் போலீசார் கைதுசெய்தனர்.

Next Story