2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது. அதில் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 18 கிராம ஊராட்சி தலைவர், 216 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 275 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 146 வாக்குச்சாவடிகள், கூடலூர் ஒன்றியத்தில் 95 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பான நடந்தது. வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வந்தனர். அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று சரிபார்க்கப்பட்ட பிறகு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 வாக்கு சீட்டுகள் கொடுக்கப்பட்டன. பின்னர் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து, வாக்குச்சீட்டுகளை மடித்து வாக்குப்பெட்டியில் போட்டனர்.
தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஆடா சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதேபோல் தும்மனட்டி, அணிகொரை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கு முன்பாக வாக்களித்துவிட்டு சென்றனர்.
ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றினர். அப்போது சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அலுவலர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு, அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதுமலை ஊராட்சியில் கார்குடி, நாகம்பள்ளி, கூவக்கொல்லி, மண்டக்கரா உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு வனவிலங்குகள் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வனப்பகுதி வழியாக நடந்து வந்து ஆதிவாசி மக்கள் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் ஆதிவாசி மக்களுக்கு அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால் அவர்கள் உற்சாகத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக மசினகுடி அருகே சொக்கநள்ளி, ஆனைக்கட்டி, சிறியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அங்கு போலீசாருடன் நக்சல் தடுப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 17 வாக்குச்சாவடிகள், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்காளர்கள், முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மாநில எல்லையில் மட்டும் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள வாக்குச்சாவடிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிவிரைவு படை போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை நுண்பார்வையாளர்கள் கண்காணித்தனர். மேலும் வெப்கேமரா பொருத்தப்பட்டிருந்ததோடு, வாக்குப்பதிவு நடைபெறுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story