திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 74.78 சதவீதம் வாக்குப்பதிவு அதிகபட்சமாக மீஞ்சூர் ஒன்றியத்தில் 88.97 சதவீதம் பதிவானது


திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 74.78 சதவீதம் வாக்குப்பதிவு அதிகபட்சமாக மீஞ்சூர் ஒன்றியத்தில் 88.97 சதவீதம் பதிவானது
x
தினத்தந்தி 30 Dec 2019 11:15 PM GMT (Updated: 30 Dec 2019 7:50 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 74.78 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மீஞ்சூர் ஒன்றியத்தில் 88.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 27-ந் தேதி திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி திருவாலங்காடு உள்ளிட்ட 8 ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் போன்ற 6 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரையில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்தோடு வந்து வாக்களித்தனர்.

ஆனால் வாக்குச்சாவடியின் உள்ளே செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாக்காளர்கள் கொண்டு செல்லும் பைகளை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தார்கள். செல்போன் கொண்டு வந்தவர்கள், அதனை வெளியே வைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களும் வாக்குச்சாவடியின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி வந்த ஆட்டோ, கார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

வாக்குச்சாவடி மையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாக்குச்சாவடி மையம் அருகே இருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பொன்னேரி அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் வாக்களிக்க சென்றவர்கள் மழை நீரில் மிதித்தவாறு, சிரமத்துடன் கடந்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நடந்து முடிந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் முறை வேறு என்பதால், புதிதாக வாக்களித்தவர்கள் குழப்பம் அடைந்தனர். இதற்காக பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கவேண்டிய முறை குறித்து தேர்தல் அதிகாரிகள் அவ்வப்போது ஒலி பெருக்கியில் வாக்காளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டே இருந்தனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சில வாக்குச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள் இடம் பெறவில்லை. இதனால் நடக்க முடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உறவினர்கள் வாக்களிப்பதற்காக தூக்கி சென்ற காட்சியையும் காணமுடிந்தது.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம், வெள்ளானூர், பொத்தூர், அரக்கம்பாக்கம், பாண்டேஸ்வரம், பாலவேடு, ஆலத்தூர், கரலப்பாக்கம், பம்மதுகுளம், அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய 13 ஊராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இணை கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்கரணை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் வாக்கினை பதிவு செய்தார்.

புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் புழல் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி நீண்ட வரிசைக்கு சாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து சுற்றி வந்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story