அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை தின்றவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை தின்றவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை தின்றவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பின்னத்தூரை சேர்ந்தவர் வீரபாண்டியன்(வயது53). தொழிலாளி. இவருக்கு ரத்த சோகை மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் காரணமாக அவரால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல முடியவில்லை.

இதையடுத்து அவர் முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்கேந்தி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டார். மாத்திரை தின்ற சிறிது நேரத்தில் அவருடைய உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தம், வயிற்று வலி, தலை வலியால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வீரபாண்டியன் கூறியதாவது:-

காலாவதியான மாத்திரை

கடந்த 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று மாத்திரைகள் வாங்கி வர முடியாத நிலையில் எடையூர் சங்கேந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்க நேரிட்டது.அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகளுடன் காலாவதியான மாத்திரைகளையும் சேர்த்து வழங்கி விட்டனர். அதை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்பில்லை

இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி கிள்ளிவளவன் கூறுகையில், எடையூர் சங்கேந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படும் ‘போலிக் ஆசிட்’ மாத்திரை பள்ளிகளில் படிக்கும் வளர்இளம் பெண் குழந்தைகளுக்காக வழங்கப்படுகிற மாத்திரையாகும்.

இந்த மாத்திரை இவருக்கு வழங்க வாய்ப்பில்லை. ஏற்கனவே பள்ளியில் வழங்கப்பட்டு வீட்டில் மாதக்கணக்கில் இருந்தாலும் அந்த மாத்திரை காலாவதியாகிவிடும். மேலும் காலாவதி மாத்திரை மற்றும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இருக்காது என்றார்.


Next Story